தமிழகத்தில் இன்று மேலும் 669 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,204-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி மத மாநாட்டில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்டோரை தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க, மறுபுறம் கொரோனா வைரசால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில், நேற்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக இருந்தது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509-பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3, 839-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story