கடந்த 7 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 13.1% அதிகரிப்பு; கேரளாவில் இல்லை


கடந்த 7 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 13.1% அதிகரிப்பு; கேரளாவில் இல்லை
x
தினத்தந்தி 11 May 2020 10:32 AM IST (Updated: 11 May 2020 1:41 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்று பரவல் என்பது தமிழகத்தில் 13.1 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் 4 மாநிலங்கள் இதுவரை கொரோனா தொற்றில்லாத மாநிலங்களாக உள்ளன.  கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.

நாடு முழுவதும் 4362 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் லேசான அறிகுறி உள்ள 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டியத்தில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. குஜராத்தில் 7,700 ஆகவும், தமிழகத்தில் 7,204 ஆகவும், டெல்லியில் 6,500 ஆகவும் பாதிப்பு அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 7 நாட்களில் தொற்று பரவல் அதிகரிப்பு விகிதம் என்பது தமிழகத்தில் 13.1 சதவிகிதமாக அதிகரித்து  உள்ளது. பஞ்சாப்பில் 12.2 சதவீதமாகவும் மேற்கு வங்கத்தில் 11.3 சதவீதமாகவும், அரியானாவில் 8.7 சதவீதமாகவும், டெல்லியில் 7.8 சதவீதமாகவும், மராட்டியத்தில் 7.5 சதவீதமாகவும், குஜராத்தில் 6.6 சதவிகிதமாக உள்ளது. கேரளாவின் தொற்று பரவல் அதிகரிப்பு விகிதம் என்பது வெறும் 0.1 சதவிகிதம்.தொற்று பாதிப்பு 500ஐக் கடந்திருந்த போதும், இந்த 100 நாட்களில் தொற்று பரவல் விகிதத்தை பூஜ்யமாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் 10-ந் தேதி (நேற்று) ஒரே நாளில் 669 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 412 பேர் ஆண்கள்; 257 பேர் பெண்கள். இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 4,907 ஆண்களுக் கும், 2,295 பெண்களுக்கும் மற்றும் இரண்டு 3-ம் பாலினத் தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 1,959 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்று மட்டும் 135 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய முதன்மை மாநிலமாக உள்ளது கேரளா. ஜனவரி 30ம் தேதி தனது முதல் கொரோனா நோயாளியை கண்டறிந்த கேரளா, வைரஸ் தொற்று உடனான 100 நாள் பயணத்தை கடந்திருக்கிறது. இந்த 100 நாட்களில் கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்தியுள்ளது கேரளா.

கேரளாவில் கடந்த 10 நாட்களில் 8 கொரோனா தொற்று மட்டுமே  கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த எட்டு பேரும் சென்னை மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். எனவே கடந்த 10 நாட்களாக மாநில எல்லைக்குள் புதிய தொற்று பரவாத மாநிலமாக கேரளா திகழ்கிறது.

இந்தியாவிலேயே 200 மற்றும் 300 தொற்றுகளை முதன்முதலில் எட்டிய மாநிலமான கேரளா, 500 எண்ணிக்கையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தியிருக்கிறது. கேரளாவுக்கு கைகொடுத்த ஐந்து முக்கிய நடவடிக்கைகளை இப்போது பார்க்கலாம்.

முதல் தொற்று ஏற்பட்டதற்கு முன்பே, அதாவது ஜனவரி 18ம் தேதி துவங்கி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தது கேரளா.

கொரோனா அறிகுறி இருந்தவர்கள் உடனே பரிசோதனைக்கு உட்படுத்தப்படனர். தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய புதிய முயற்சிகளை கையாண்டது. ஒருவருக்கு தொற்று உறுதியானால், அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானோரை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தது. தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், தொடர்புகளை கண்டறிதல் என மூன்றிலும் தொற்று பரவலுக்கு முன்கூட்டியே அதீத கவனம் செலுத்தியது கேரளாவின் வெற்றிக்கு முதல் காரணம்.

கேரளாவில் முதல் மூன்று தொற்று ஏற்பட்ட பிப்ரவரி 2ம் தேதி, அந்த மூவரோடு தொடர்பில் இருந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று பரவத்துவங்கிய போது, சராசரியாக ஒருவருக்கு தொற்று எற்பட்டால், அவர்களோடு தொடர்பில் இருந்த 550 பேரை தனிமைப்படுத்தியது கேரளா. 200 தொற்றைக் கடந்த போது, சராசரி தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை ஒருவருக்கு 750 ஆக அதிகரித்தது.

கேரளாவில் 200 முதல் 300 வரை கொரோனா தொற்று அதிகரித்த போது, அம்மாநிலத்தில் 1.70 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 17 பேர் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ளும் தற்போது 20 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்துதலை மிக கவனமாக கையாண்டது கேரளா.

ஊரடங்கு காலத்தில் கேரளாவில் நோய் தொற்று உச்சத்தில் இருந்த போதே, அதிக எண்ணிக்கையிலானோரை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்ததன் மூலம் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. இதனால் 95 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திருமப, 17 பேரை மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். தனிமைப்படுத்துவதில் கேரளா அரசு கையாண்ட இந்த முறை பெரிதும் பலனளித்தது.

கேரளாவில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. தொற்று அதிகமாக பரவிய காலத்திலேயே ஒரு நாளில் ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படவில்லை. கேரளாவில் 100 தொற்றைக் கடந்தபோது, சராசரியாக நாளொன்றுக்கு 687 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 100 நாட்களில் 4 நாட்களில் மட்டுமே 1000 பேருக்கு மேல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனைகளில் அறிவியல் பூர்வமான சில யுக்திகளை கேரளா கையாண்டது. அது பெரிதும் கைகொடுத்தது.

முதல் தொற்று ஏற்படும் இரு வாரங்களுக்கு முன்னரே, மருத்துவமனைகளை தயார் படுத்தத் துவங்கியிருந்தது கேரளா. ஜனவரி 30ம் தேதி முதல் தொற்று ஏற்பட்ட உடன் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டன. மார்ச் இரண்டாவது வாரத்தில் தொற்று பரவல் திடீரென அதிகரிக்க, அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் செய்திருந்தது கேரளா.

 மார்ச் மூன்றாவது வாரத்தில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட, மருத்துவப் பணிகளில் எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேற்பாடுகளை செய்திருந்தது.

அதேபோல் மருத்துவ சிகிச்சைகளிலும் தனி கவனம் செலுத்தியது. இதனால் குணமடைவோரின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்தியாவிலேயே 500க்கும் மேற்பட்டோர் பாதித்த போதும், குணமடைந்தோரின் விகிதம் 95 சதவிகிதத்தை கடந்தது கேரளாவில் தான்.

நோய் தடுப்பு பணிகளில் கேரளா முக்கியமாக நம்பியது விழிப்புணர்வு நடவடிக்கைகளை. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வு முயற்சிகளை ப்ரேக் தி செயின் எனும் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் அரசே மேற்கொண்டது. கை கழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றை தெளிவாக கற்றுக்கொடுத்தது அரசு. இது பெரிதும் பலனளித்தது. மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருந்த மாநிலமான கேரளா, இன்று மிகவும் கட்டுப்படுத்திய மாநிலமாக மாறியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தான்.

Next Story