10-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் - அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
10-ம் வகுப்பு மாணவியை எரித்துக்கொலை செய்த குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
“விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவி ஜெயஸ்ரீயை அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்திய கொடூர சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. ஈவு, இரக்கமற்ற முறையில் சிறுமியை படுகொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
மகளை இழந்து தவிக்கும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக 10-ம் வகுப்புப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் மனவேதனை அடைந்தேன். மேலும் தந்தையிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்?. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருகங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழகத்தில் சில சமூகவிரோதிகள் தைரியமாக சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற அச்சத்தை விளைவிக்கிறது. எனவே தமிழக அரசு இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். நிர்பயா வழக்கில் என்ன தண்டனை அளிக்கப்பட்டதோ, அதுபோன்று ஒரு தண்டனை அளிக்கப்பட்டால் தான் சட்டத்தின் மீது நம்பிக்கை வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொலைக் குற்றவாளிகள் அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள் என்பதால் ஆளுங்கட்சியின் தலையீட்டுக்கான வாய்ப்பு இருப்பதாக அச்சம் அப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. வழக்கு விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
மகளை இழந்து தவிக்கும் ஜெயபால் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் தமிழக அரசே இதற்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் இனி இதுபோன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிமுன் அன்சாரி
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story