திருமழிசை சந்தையில் விற்பனை தொடங்கியது - சென்னையில் காய்கறிகள் விலை குறைந்தது


திருமழிசை சந்தையில் விற்பனை தொடங்கியது - சென்னையில் காய்கறிகள் விலை குறைந்தது
x
தினத்தந்தி 12 May 2020 3:15 AM IST (Updated: 12 May 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருமழிசை தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியதையடுத்து சென்னையில் காய்கறி விலை குறைந்தது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் ‘சீல்’ வைக்கப்பட்டதையடுத்து திருமழிசையில் நேற்று தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 440 மொத்த வியாபாரிகளில் 200 வியாபாரிகள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருந்தபோதிலும் நேற்று 192 கடைகளில் முழுமையாக பணி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு இருந்தன. இதிலும் பல கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. எனினும், சில்லரை வியாபாரிகளுக்கு காய்கறிகளை ஒரே இடத்தில் வாங்கும் வாய்ப்பாக திருமழிசை மார்க்கெட் அமைந்தது.

திருமழிசை சந்தைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் காய்கறி லாரிகள் வர தொடங்கின. நள்ளிரவு 12 மணி முதல் வியாபாரம் தொடங்கியது. காய்கறி வாங்க வந்த வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன.

அதேபோன்று, காய்கறி வாங்க வந்தவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தபடி ஒலிப்பெருக்கி மூலம் வாகனங்கள் மற்றும் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தினர். திருமழிசையில் காய்கறி சந்தை திறந்ததையடுத்து சென்னையில் காய்கறி விலை சற்று குறைந்தது.

சந்தை குறித்து கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறும்போது, “கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவது போன்று சுமார் 400 லாரிகளில் சரக்குகள் வந்தன. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளன. 90 சதவீதம் அளவிற்கு காய்கறிகள் வந்துள்ளன. ஆனால், கோயம்பேடு போன்று இங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை” என்றார்.

Next Story