இறப்பு, உடல்நல பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக ஊருக்கு செல்ல ‘பாஸ்’ கேட்கும் விண்ணப்பங்கள் உடனே பரிசீலனை - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
இறப்பு, உடல்நல பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக ஊருக்கு செல்ல பாஸ் கேட்கும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றன என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் தமிழக அரசிடம் பாஸ் வாங்க வேண்டியது உள்ளது. இந்த பாஸ் வழங்கும் அலுவலகம் இரவு நேரங்களில் செயல்படாததால், உறவினர்கள் இறப்பு, உடல்நலம் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்காக வெளியூருக்கு உடனே போக முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதனால், பாஸ் வழங்கும் அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இறப்பு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக பாஸ் கேட்டு செய்யப்படும் விண்ணப்பங்கள், சென்னை மாநகரத்தை பொருத்தவரை அரை மணி நேரத்திலும், பிற மாவட்டங்களில் 2 மணி நேரத்திலும் பரிசீலித்து, பாஸ் வழங்கப்படுகிறது.
மே 10-ந்தேதி மாலை 6 மணி வரை 3 லட்சத்து 61 ஆயிரத்து 433 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 13 ஆயிரத்து 222 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்ற விண்ணப்பங்கள் எல்லாம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விட்டன. இறப்பு, உடல்நலம் பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக வெளியூர் செல்ல பாஸ் கேட்போரின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story