சென்னை போலீசில் ஒரே நாளில் உதவி கமிஷனர், 7 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்வு


சென்னை போலீசில் ஒரே நாளில் உதவி கமிஷனர், 7 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 May 2020 11:15 PM GMT (Updated: 11 May 2020 8:43 PM GMT)

சென்னை போலீசில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஒரு உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து விட்டது.

சென்னை, 

உயிரை பணயம் வைத்து பணியாற்றும் போலீஸ்துறை மீது கொரோனா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு துணை கமிஷனர், 2 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என சென்னை போலீசில் ஏற்கனவே 81 பேரை கொரோனா தாக்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை போலீசில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 7 இன்ஸ்பெக்டர்களும் நேற்று பாதிக்கப்பட்டனர். இது தவிர 5 போலீஸ்காரர்களும் சிக்கினார்கள்.

94 ஆக உயர்வு

எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் கொரோனாவுக்கு மாட்டினார்கள். அவர்களது அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மணலி புதுநகர், சாத்தாங்காடு, முத்தையால்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று மட்டும் சென்னை போலீசில் கொரோனாவால் 13 பேர் தாக்கப்பட்டனர். இதனால் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை சென்னை போலீசில் 94 ஆக உயர்ந்தது.


Next Story