தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக உயர்வு - ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக உயர்வு - ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 12 May 2020 5:30 AM IST (Updated: 12 May 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கை தாண்டியுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய முதல் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போல் இந்த மாவட்டங்களும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டம் பட்டியலில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்து உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய மார்ச் 7-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை 2 ஆயிரத்து 323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 நாட்களில் 5 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டு 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரே நாளில் 92 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 2 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 4 பெண்கள் உள்பட 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ள 66 வயது பெண் கொரோனா நோய் தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைப்போல் சென்னையை சேர்ந்த 67 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் கன்னியாகுமரியை சேர்ந்த 65 வயது நபரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடலூரை சேர்ந்த 32 வயது பெண் மன அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் கடந்த 6-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கடந்த 8-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைப்போல் சென்னையை சேர்ந்த 36 வயது பெண் நீரிழிவு நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 9-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்கள் இருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.

தமிழகத்தில் நேற்று பாதிக் கப்பட்ட 17 மாவட்டங்களில், சென்னையில் 48 குழந்தைகள் உள்பட 538 பேரும், திருவள்ளூரில் 7 குழந்தைகள் உள்பட 97 பேரும், செங்கல்பட்டில் 4 குழந்தைகள் உள்பட 90 பேரும், அரியலூரில் 1 குழந்தை உள்பட 33 பேரும், திருவண்ணாமலையில் 1 குழந்தை உள்பட 10 பேரும், காஞ்சீபுரத்தில் 8 பேரும், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தர்மபுரியில் 2 பேரும், வேலூர், விருதுநகர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story