நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன; முதல் அமைச்சர் பழனிசாமி
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கலந்துகொண்டனர். துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வரும் 17ந்தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவை முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, கண்ணுக்கு தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். கொரோனா தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிக பாதிப்பு தெரிகிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்துதான் பின்னர் குறையும் என கூறினார்.
Related Tags :
Next Story