அரசு அறிவுறுத்தலை கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் - எடப்பாடி பழனிசாமி தகவல்
கொரோனா பரவல் உயர்ந்துதான் தணியும் என்றும் அரசு அறிவிக் கிற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப் பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வது ஆகியவை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வை தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரை வருமாறு:-
கொரோனாவைப் பொறுத்தவரைக்கும், முதலிலே சிறிதளவு பரவி, பிறகு உயர்ந்து, பிறகுதான் தணியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படித்தான் பல்வேறு நாடுகளிலே நிகழ்ந்திருக்கிறது. இதுதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிற நிலைமை.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம், தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழு வழங்கும் ஆலோசனையின்படி தமிழக அரசு அதை பின்பற்றி நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை பெருமளவில் தடுக்க முடிந்திருக்கிறது.
மக்கள் கையில்
அரசு அறிவிக்கிற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். அதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தொற்று பரவலை தடுப்பது சுலபமல்ல.
அரசு அறிவிக்கின்ற அறிவிப்புகளை மக்கள் பின்பற்றி நடந்தால் வைரஸ் பரவலை தடுக்க முடியும். இது பொதுமக்கள் கையில் தான் இருக்கிறது.
அனைத்து வசதிகளும்...
மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. குறிப்பாக, வெளிமாநிலத்தில் இருக்கிற மளிகை பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளை விவசாயிகளிடத்தில் அதிகாரிகள் சென்று விலைக்கு வாங்கி, சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் வீதி வீதியாக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலமாக எடுத்துச்சென்று வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு துணைநிற்கும் காரணத்தினால் தான் ஊரடங்கு பிறப்பித்ததிலிருந்து இன்றுவரை மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறுகின்றன.
ரேஷன் பொருட்கள்
ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கு கொடுத்துவிட்டோம். மே மாதத்திற்கு இப்போது வினியோகம் செய்கிறோம்.
ஐந்து பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் ஏப்ரல் மாதம் 25 கிலோ அரிசி பெற்றிருந்தால், அந்த ஐந்து பேர் குடும்பத்தில் இருக்கிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதம் 50 கிலோ அரிசி நாங்கள் வழங்குகிறோம். விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் ஒரு கிலோ கொடுக்கிறோம். ஜூன் மாதமும், மே மாதம் வழங்கப்பட்டதைப் போல பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறோம்.
அரசு துணை நிற்கும்
தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பிரச்சினையே எழவில்லை.
நகர பகுதியை தவிர்த்து ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. சிறு, குறு தொழில்கள் தடையில்லாமல் இயங்குவதற்கும் அரசு துணை நிற்கிறது.
இந்தியாவிலேயே அதிக அளவில் பரிசோதனை
நோய் ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதாக பேசப்படுகிறது. பரிசோதனை அதிகமாக செய்யப்படுவதன் காரணத்தினாலே அதிக எண்ணிக்கை வருகிறது. மற்ற மாநிலத்திலே இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை, அதனால் அங்கு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவிலேயே அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.
இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அந்த அளவிற்கு நம்முடைய மருத்துவர்கள் சிறந்த முறையிலே சிகிச்சை அளிப்பதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாகவும், இறப்பு எண்ணிக்கை 0.67 சதவீதமாக இருக்கிறது. சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவிலே குணமடைந்து வீடு திரும்புவார்கள். மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஆகவே, இந்த தொற்று சற்று ஏறித்தான் இறங்கும். பாதிக்கப்பட்டவர் களை குணமடையச் செய்ய இந்த அரசு துணை நிற்கும்.
குடிமராமத்து பணி
இந்த ஆண்டும் குடிமராமத்து திட்டத்தை வேகமாக, துரிதமாக மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். பருவகால மழை நீர் முழுவதையும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் குடிமராமத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தியதால்தான் இன்றைக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பெய்கின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து வைத்திருக்கிறோம். டெல்டா பாசனப் பகுதிகளில் கால்வாய்களை துரிதமாக தூர்வார கலெக்டர்கள் நடவடுக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் சமீபத்தில் உரையாற்றியபோது, 20 லட்சம் கோடி ரூபாயை ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தப்படும் என்று கூறினார். அவர் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்த பிறகு அதை தமிழகம் செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story