ஓய்வு பெறும் வயதை 58 வயதில் இருந்து 59 ஆக உயர்த்திய உத்தரவு யாருக்கு பொருந்தாது? - தமிழக அரசு விளக்கம்
ஓய்வு பெறும் வயதை 58 வயதில் இருந்து 59 ஆக உயர்த்திய உத்தரவு யாருக்கு பொருந்தாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக அதிகரிக்கும் அரசாணை தொடர்பாக அரசிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டன. தற்போது அதற்கான விளக்கம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், ஓய்வூதிய வயது உயர்வு உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தாது? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
* மே மாதம் 1-ந்தேதி அல்லது அதற்கு முன்பாக 58 வயதை எட்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
* மே மாதத்துக்கு முன்பாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் ஓய்வு பெற்று, மறு பணிநியமனம் பெற்று வேலையில் தொடர்பவர்களுக்கு ஓய்வூதிய வயது உயர்வு உத்தரவு பொருந்தாது.
* ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் 30-ந்தேதிக்கு முன்பாக ஓய்வு பெற அனுமதிக்கப்படாத ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தாது.
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட மே 7-ந்தேதியன்று அரசு பணியில் உறுதி (ரெகுலர் சர்வீஸ்) செய்யப்பட்டவர்களுக்கும், மே 31-ந்தேதியில் இருந்து ஓய்வு பெறக் கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே ஓய்வு வயதை அதிகரிக்கும் உத்தரவு பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story