இரவு 9 மணி வரை திறப்பு: டீ கடைகளில் டீ குடிக்க அனுமதி - வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள்
டீ கடைகளில் டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
டீ கடைகளை திறக்க அனுமதித்துள்ளதற்கு நன்றி. அதே நேரத்தில் பார்சல் மட்டுமே அனுமதி என்பது தவிர்க்கப்பட வேண்டும். டீ கடைகளில் சமூக இடைவெளியுடன் நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ டீ சாப்பிட அனுமதிக்க வேண்டும். டீ கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வேண்டும்.
கோயம்பேடு வணிக வளாகத்தின் உணவு தானியப் பிரிவு மீண்டும் செயல்பட ஏதுவாக திறந்துவிட வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த காய்கனி வியாபாரிகள் மண்டபங்களில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தவிர மற்றவர்களை விடுவித்து விடலாம்.
தமிழகமெங்கும் எந்த காரணமும் இல்லாமல் நூற்றுக்கணக்கான கடைகள் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளையெல்லாம் உடனடியாக திறந்துவிட வேண்டுகிறோம். ஒரு கடையில் அல்லது அங்காடியில் ஓரிருவருக்கு கொரோனா தொற்று என்பதற்காக அந்த கடைகளை மூடிவிடுவது நியாயமற்றது. இதில் தாங்கள் நல்ல முடிவெடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story