எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த தெளிவான விளக்கம் 19-ந்தேதி வெளியிடப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த தெளிவான விளக்கம் வருகிற 19-ந் தேதி அறிக்கையாக வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சில மாணவ-மாணவிகள் வேறு மாவட்டத்திற்கு சென்று எழுத உள்ளனர். அவர்களுக்கு மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பான தெளிவான விளக்கம் வருகிற 19-ந் தேதி அறிக்கையாக தெரிவிக்கப் படும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலையை கருத்தில் வைத்தும்தான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு முடிவு பெற்று விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கலெக்டர்கள் தலைமையில் தேர்வுகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.
நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்க உள்ளன. இந்த தேர்வை பொறுத்தவரையில் 2 வாரம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் முடிந்த உடனே 15 நாட்களுக்கு ஒரு முறை மாதிரி தேர்வு நடத்தப்படும். அதில், 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு செய்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் தங்கி படிக்க வசதி செய்யப்படும். அப்போது மாணவர்களுக்கு தேவையான உணவு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story