தமிழகத்தில் பேருந்து எப்போது இயக்கப்படும்..? வெளி மாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும்..?


தமிழகத்தில் பேருந்து எப்போது இயக்கப்படும்..? வெளி மாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும்..?
x
தினத்தந்தி 15 May 2020 8:35 AM IST (Updated: 15 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பேருந்து எப்போது இயக்கப்படும்..? வெளி மாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும்..? என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதன்படி 4 வது ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது, விமானம், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சிலகட்டுப்ப்பாடுகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.  

ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் முற்றிலும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விரைவில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்  சில மாவட்டங்கள் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் இருக்காது அதற்கான ஏற்பாடுகள் காலதாமதம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழகத்தை ஒட்டி இருக்கும் மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் செல்ல 044-24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்து செல்லும் நேரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் எனவும் விரைவு பேருந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக ஏற்கெனவே வெளி மாநிலம் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story