திருச்சியில் விபத்தில் உயிரிழந்த வி.ஏ.ஓ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்; முதல் அமைச்சர் அறிவிப்பு
கொரோனா பணி முடிந்து வீடு திரும்பியபோது சரக்கு வேன் மோதி உயிரிழந்த வி.ஏ.ஓ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46). இவர், கடந்த 9-ந் தேதி சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாம் பணிக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு குமார் நேற்று முன்தினம் பணி செய்தார். பின்னர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
திருச்சி-மதுரை செல்லும் மன்னார்புரம் மேம்பாலத்தில் இரவு 10.30 மணிக்கு குமார் வந்தபோது, பின்னால் மதுரையில் இருந்து வேகமாக வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சரக்கு வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்கூட அறையில் இருந்த குமாரின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அஞ்சலி செலுத்தினார். விபத்தில் பலியான கிராம நிர்வாக அதிகாரி குமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி என்ற கிராமம் ஆகும்.
இதனையடுத்து, கொரோனா பணி முடிந்து வீடு திரும்பியபோது விபத்தில் உயிரிழந்த வி.ஏ.ஓ. குமாரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story