பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பஸ் மூலம் தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பஸ் மூலம் தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வந்தே பாரத் அறிவிப்பின்கீழ், முதல்கட்டமாக, ஒருசில விமானங்கள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தன. அதிலும், சவுதிஅரேபியாவில் இருந்து ஒருவிமானம் கூட வரவில்லை. 2-வது கட்டமாக, அரசு அறிவித்து இருக்கின்ற 176 விமானங்களில் ஒன்றுகூட தமிழ்நாட்டுக்கு இல்லை. முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 3 மாதங்களாக ஈரான் நாட்டில் படகுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
அதேபோல, ரெயில்வே துறையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில், தமிழ்நாட்டில் இருந்து பிறமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 18 ரெயில்கள் புறப்பட்ட நிலையில், வெளியில் இருந்து ஓரிரு ரெயில்கள்தான் தமிழ்நாட்டுக்கு வந்தன.
தமிழ்நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், இங்கிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story