இந்தியாவில் 2-வது இடம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் 2-வது இடம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 15 May 2020 11:00 PM GMT (Updated: 15 May 2020 9:11 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பரிசோதனை செய்வதன் மூலம் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறிய முடிகிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்திய அளவில் நேற்று நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 434 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 385 பேர் தமிழகத்தில் இருந்தவர்கள். மேலும் 40 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், 6 பேர் மாலத்தீவில் இருந்தும், 2 பேர் குஜராத்தில் இருந்தும், ஒருவர் கர்நாடகாவில் இருந்தும் தமிழகம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 359 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 599 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 53 வயது பெண் மற்றும் 32 வயது ஆண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதேபோல் 57 வயது ஆண் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், 61 வயது ஆண் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 34 வயது ஆண் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 310 பேர்

தமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மாலத்தீவில் இருந்து வந்த ஒருவர் உட்பட 310 பேரும், நெல்லையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 22 பேரும், திருவள்ளூரில் 21 பேரும், செங்கல்பட்டில் 20 பேரும், காஞ்சீபுரத்தில் 11 பேரும், தூத்துக்குடியில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 10 பேரும், மதுரையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 5 பேர் உட்பட 11 பேரும், தேனியில் 6 பேரும், திருவண்ணாமலையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உட்பட 4 பேரும், கன்னியாகுமரியில், மாலத்தீவில் இருந்து வந்த 4 பேரும், கடலூரில் 3 பேரும், ராணிப்பேட்டையில், குஜராத்தில் இருந்து வந்த 2 பேரும், திண்டுக்கல், தென்காசி, மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உட்பட 2 பேரும், விருதுநகரில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உட்பட 2 பேரும், பெரம்பலூரில் 2 பேரும், தஞ்சாவூரில் ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 28 குழந்தைகளும், 38 முதியவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரத்து 104 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story