விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்: விவசாயத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் திட்டம் - வாரிய அதிகாரிகள் தகவல்


விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்: விவசாயத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் திட்டம் - வாரிய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 16 May 2020 8:30 PM GMT (Updated: 16 May 2020 7:39 PM GMT)

விவசாயத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இணைந்து பயன்பெற வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

தமிழக மின்சார வாரியம், தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. இதில் சாதாரண வகை மற்றும் சுயநிதி வகை என இரண்டு அடிப்படையில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இதில் பெரும்பாலான விவசாயிகள் 5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். விவசாயிகள் நலன் கருதி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக மின்திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்துவதாக இருந்தால் கூடுதல் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக 15 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்கள் வரை மின்சாரம் வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகள் வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதுவும் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார டிரான்ஸ்பார்மர்களின் கொள்திறன் போதுமானதாக இருந்தால் உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.

அதேபோன்று முதலில் வருபவர்களுக்கு முதலில் இணைப்பு வழங்கப்படும். ஒவ்வொரு குதிரை திறனுக்கும் விவசாயிகள் மின்சார வாரியத்துக்கு ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story