எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதலாம் - பள்ளி கல்வித்துறை ஏற்பாடு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதலாம் - பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
x
தினத்தந்தி 17 May 2020 3:30 AM IST (Updated: 17 May 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தலாம் என்றும், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற வதந்திகளுக்கு மத்தியில், நடந்தே தீரும் என்று அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், விடுபட்ட பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு ஜூன் 2-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், எப்படி தேர்வு நடத்தப்படும்?, மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு மத்தியில் தேர்வை எப்படி நடத்தலாம்?, தேர்வு மையங்கள், கட்டுகாப்பு மையங்கள், வினாத்தாள் கொண்டு செல்வது உள்பட தேர்வுக்கான அடுத்தக்கட்ட பணிகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில், கல்வித்துறை உயர் அதிகாரிகள், தேர்வுத்துறை அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் என அனைவரும் காணொலி காட்சி மூலம் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று இருக்கும் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது சுகாதாரத்துறையின் உத்தரவாக இருக்கிறது. எனவே சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு தேர்வு அறையிலும் தேர்வு எழுத 10 மாணவர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் தேர்வு அறைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கருத்தில்கொண்டு அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வை எழுத வைக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்பார்வையில் ஈடுபட எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படும் என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் பட்டியலாக தயாரித்து வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதவிர சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) கலந்தாலோசித்த பிறகு, முழுமையான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story