‘திருமணம் பிரித்து விடுமோ?’ என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் தங்களை பிரித்து விடுமோ? என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதியின் பெற்றோர் கடந்த 6 மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜோதி கணவரை பிரிந்து பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு அவர் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த தறிப்பட்டறையில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த பிரியா (20) என்பவரும் வேலை செய்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜோதிக்கும், பிரியாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையில் திருமணம் நடந்தால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய நேரிடுமே என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை பிரியா, தாயிடம் கூறிவிட்டு சைக்கிளில் ஜோதி வீட்டுக்கு வந்தார். அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் ஒரே சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story