கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு, வியாபாரிகள் கோரிக்கை


கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு, வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 May 2020 3:45 AM IST (Updated: 18 May 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோயம் பேடு மார்க்கெட்டில் மீண் டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னையை அடுத்த திருமழிசை துணைக்கோள் நகர வளாகத்தில் காய்கறி சந்தையும், மாதவரம் பஸ் நிலைய வளாகத்தில் பழ மார்க்கெட்டும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள் நலன் காக்க கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறிபழ வியாபாரம் நடைபெற வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைகள் செயல்பட அனுமதி

சென்னை கோயம்பேட்டில் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. ஆனால் திருமழிசையில் வெறும் 400 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு வியாபாரிகள் நலனையும் காக்க வேண்டும். அதற்கு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

தகுந்த துப்புரவு சுகாதாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு அரசு தரும் வழிகாட்டலின்படி வியாபாரிகள் செயல்பட தயாராக இருக்கிறோம். கோயம்பேட்டில் உள்ள 14 வாயில்களில் ஒவ்வொரு நாளும் 7 வாயில்கள் என இடைவெளி விட்டு திறந்து வியாபாரம் செய்கிறோம். டாஸ்மாக் கடைகளில் உள்ளது போலவே காய்கறி வாங்கவும் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டும். அதற்கு தகுந்த ஏற்பாடுகளை அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் முன்னெடுக்க வேண்டும். எனவே முடங்கி கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் உயிர்த்தெழ செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வியாபாரிகள் நாங்கள் முழு ஒத்துழைப்பு தர தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story