தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை - கல்வித்துறை அறிவிப்பு


தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை - கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 1:30 AM IST (Updated: 19 May 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை, 

இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், பள்ளி வளாகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளையும் 19-ந் தேதிக்குள் (இன்று) முழுமையாக சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதால் அனைத்து வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகம் முழுமையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கிருமிநாசினி திரவம், சோப்பு, கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதேபோல், குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விடுப்பு எடுப்பதற்கு அனுமதி இல்லை

தேர்வு மையத்திற்குள் வரும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்திட வேண்டும். 20-ந்தேதி முதல் (நாளை) தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களது பள்ளியை சார்ந்த அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நாள்தோறும் பள்ளிக்கு வருகைபுரிய செய்வதோடு வருகைப்பதிவேட்டில் இருநேரமும் கையொப்பமிட செய்திட வேண்டும்.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு பணியிலும் மற்றும் மேல்நிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். இது தேர்வு பணிக்காலம் என்பதால் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் இல்லாமல் எவ்வகை விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி இல்லை.

அனைத்து பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வயது, வீட்டு கதவு எண், வார்டு எண், தெருப்பெயர், வசிக்கும் பகுதி(ஊர்) ஆகிய விவரங்களுடன் தனி பதிவேடு அவசியம் பராமரிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர் எனில், இப்பதிவேட்டில் அடையாளத்திற்காக அவரது பெயரினை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story