எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்தநிலையில், பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்-அமைச்சர் ஆலோசனைபடியும், ஒப்புதலோடும் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை குறிப்பிட்ட காலத்தில் பொதுத்தேர்வு நடைபெறும்’ என்றார். இதையடுத்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர், ஆணையர், இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் மாயவன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story