தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்


தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2020 5:45 AM IST (Updated: 19 May 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய கிராமப் பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

4-வது கட்டமாக நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடைகளை திறப்பது, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது.

இருப்பினும் கொரோனா பரவல் அதிகமாகி விடக் கூடாது என்பதால், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. அதேசமயம், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, முடி திருத்தும் தொழிலாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இன்று முதல் திறக்க அனுமதி

இந்த நிலையில், கிராமப்புற பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

ஊரக பகுதிகள்

நோய்த்தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19-ந்தேதி (இன்று) முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.

சமூக இடைவெளி

இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story