தமிழகத்தில் காற்றாலை சீசன் தொடக்கம்: தினமும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி


தமிழகத்தில் காற்றாலை சீசன் தொடக்கம்: தினமும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
x
தினத்தந்தி 20 May 2020 2:30 AM IST (Updated: 19 May 2020 8:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் காற்றாலை சீசன் தொடங்கி உள்ளதால் தினமும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி கடந்த 15-ந்தேதியில் இருந்து தொடங்கி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்வினியோகம் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேநேரம் அனல் மின்உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரத்தை முழு அளவில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்தியும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் இருந்து வருகிறது. காற்றாலைகளின் அதிகமான மின்சார உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தியாகி உள்ளது.

இதுகுறித்து இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

காற்றாலை மின்சார உற்பத்தி நடப்பாண்டு கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. முதல் நாளே 3 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தி செய்துள்ளது. இது படிப்படியாக உயர்ந்து தினமும் 4 ஆயிரம் மெகா வாட் வரை உற்பத்தி அதிகரிக்கும்.

கடந்த 2 ஆண்டுகளாகவே காற்றாலை மின்உற்பத்தி நன்றாகவே இருந்து வருகிறது. நடப்பாண்டு இம்மாதத்திலேயே உற்பத்தியை தொடங்கி உள்ளது. அதுவும் வங்காள விரிகுடாவில் தற்போது புயல் சின்னம் வேறு இருப்பதால் காற்று நன்றாக வீசும். எனவே அடுத்த 10 நாட்களுக்கு காற்றாலை மின்சாரம் அதிகப்படியாக உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story