திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.385 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை, கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 8.68.22 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பாக ரூ.195 கோடி நிதியை வழங்கும், எஞ்சிய ரூ.190 கோடியே 63 லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட ரூ.385 கோடியே 63 லட்சம் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக ரூ.70 கோடி நிதி ஒப்பளிப்பு செய்தும் 18-12-2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் ரூ.143 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் ரூ.165 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை ரூ.77 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story