பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.121 கோடி நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில், மீன்வளத்துறை அறிக்கை தாக்கல்


பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.121 கோடி நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில், மீன்வளத்துறை அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 21 May 2020 3:00 AM IST (Updated: 21 May 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் அருகே எண்ணெய் கப்பல்கள் மோதிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.121 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீன்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் கடந்த 2017-ம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எண்ணூர் துறைமுகம் அருகே 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 கப்பல்கள் மோதிக்கொண்டன.

இதில், ஒரு கப்பலில் இருந்த 196 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால், மீன்வளம் பாதிக்கப்பட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது. நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் சார்பில் அந்த நிறுவனம் இன்சூரன்ஸ் செய்திருந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.141 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.121.28 கோடியில் 1 லட்சத்து 472 பயனாளிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 30 பகுதிகளை சீரமைக்கவும், செயற்கை திட்டுகள் ஏற்படுத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டபடி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு எண்ணெய் கசிவால் தற்போது வரை பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து தீர்ப்பாயம், இந்த கமிட்டி 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

Next Story