தமிழக அரசு செலவினங்களை குறைக்க அதிரடி முடிவு


தமிழக அரசு செலவினங்களை குறைக்க அதிரடி முடிவு
x
தினத்தந்தி 21 May 2020 5:27 PM IST (Updated: 21 May 2020 10:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு செலவினங்களை குறைப்பதற்காக அதிரடி முடிவுகளை எடுத்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக அரசு நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பினை எதிர்கொள்ளும் ஒரு பகுதியாகவும், அரசு செலவினங்களை குறைப்பது என முடிவு செய்துள்ளது.  அரசின் மொத்த செலவில் 20 சதவீதம் அளவுக்கு குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.  மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும்.  அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பர செலவுகளை 25% குறைத்து கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.  மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளுக்கு வாங்குவது 50% வரை குறைக்கப்பட வேண்டும்.

இதேபோன்று நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.  மதிய விருந்து, இரவு விருந்துகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

உபகரணங்களை கொள்முதல் செய்வதில் சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என அரசாணையில் தெரிவித்து உள்ளது.

Next Story