சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு
சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 776 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 124 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைக்கப்பட்டுள்ளன, திரு.வி.க.நகர் மண்டலம் - 124ல் இருந்து 105 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 86 பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story