திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன - டாஸ்மாக் நிர்வாகம்
திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன், தமிழக அரசு அறிவித்தபடி கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அன்றும், மறுநாளும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றது.
இதற்கிடையே நிபந்தனைகளை மீறியதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 8-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியே காணப்படுகின்றன.
இந்நிலையில், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்றும் உயர்தர மதுபான வகைகள் மட்டுமே இருப்பு உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் திறக்கப்படாத 1600 டாஸ்மாக் கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.103 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story