தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்வு


தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 May 2020 12:00 AM GMT (Updated: 22 May 2020 7:59 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 100 நெருங்குகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 9 நாளில் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 593 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களில் இதுவரை 62 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று (22-ந் தேதி) 694 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மராட்டியத்தில் இருந்து வந்த 66 பேரும், டெல்லியில் இருந்து வந்த 13 பேரும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த 6 பேரும், ஆந்திராவில் இருந்து வந்த 2 பேரும், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் நேற்று மொத்தம் 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 524 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 846 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனையில் 5 ஆயிரத்து 349 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று சென்னையை சேர்ந்த 81 மற்றும் 51 வயது ஆண்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதைப்போல் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது ஆணும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுவரை 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 569 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், திருவள்ளூரில் 39 பேரும், மதுரையில் 33 பேரும், விருதுநகரில் 26 பேரும், நெல்லையில் 18 பேரும், காஞ்சீபுரம், ராமநாதபுரத்தில் தலா 13 பேரும், தூத்துக்குடியில் 9 பேரும், தேனியில் 5 பேரும், திருச்சியில் 4 பேரும், புதுக்கோட்டை, திருவாரூர், வேலூரில் தலா 3 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 93 முதியவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 902 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 673 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,178 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்து 653 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 503 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 17 ஆயிரத்து 246 மாதிரிகள் 2-வது முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story