தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை


தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை
x
தினத்தந்தி 23 May 2020 9:28 AM GMT (Updated: 23 May 2020 9:28 AM GMT)

தமிழகத்தில் 2வது நாளாக 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது.  கத்திரி வெயிலால் கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

சமீபத்தில் தெற்கு வங்க கடலில் தோன்றி வங்காளதேசம் நோக்கி பயணித்த அம்பன் புயலால், தமிழகத்தில் கடும் வெப்பநிலை நிலவியது.  இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் 2வது நாளாக இன்று வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது.  இதன்படி, திருத்தணியில் 110.84 டிகிரி, வேலூர் 108.32 டிகிரி, மீனம்பாக்கம் 106.16 டிகிரி, ஈரோடு 104.72 டிகிரி, திருப்பூர் 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம் 104.36 டிகிரி என வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Next Story