தமிழகத்தில் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்


தமிழகத்தில் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 24 May 2020 5:30 AM IST (Updated: 24 May 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார்.

சேலம்,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாங்கள் தவறி விட்டோமாம். இந்தியாவிலேயே சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதிலே பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 2, 3 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் செய்தி பார்த்திருப்பீர்கள். வெளிமாநிலத்தில் தங்கியிருந்து ஒரு வயதான அம்மா ரெயிலில் வந்தார்.

ரெயிலில் வந்தபோது அந்த அம்மா பேட்டியை நான் பார்த்தேன். அவர் யாரென்று எங்களுக்குத் தெரியாது. அந்த அம்மா சொன்ன செய்தி பல ஊடகங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் வந்தது. அதிகாரிகள் வந்தார்கள், எங்களை இறக்கினார்கள், எங்கே கூட்டிக் கொண்டு போகிறார்கள் என்றுகூட சொல்லவில்லை, பஸ்சில் அழைத்துக் கொண்டு போனார்கள். ஒரு இடத்தில் தங்க வைத்தார்கள். பிரமாதமான வசதி செய்து கொடுத்தார்கள். அரசுக்கு முழு பாராட்டை தெரிவிக்க வேண்டும் என்று அந்த அம்மா சொல்கிறார். ஆகவே, இப்படி பொதுமக்களுக்கு அருமையான வசதியை நாங்கள் செய்து கொடுக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான வசதியை செய்து கொடுத்து, உரிய முறையில் சிகிச்சை அளித்து, வீட்டுக்கே கொண்டுபோய் விடுகிறோம். இதைவிட என்ன அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்?

இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடுதான். அதுமட்டுமல்லாமல், அதிகமான அளவில் 67 பரிசோதனை நிலையங்களை தமிழ்நாட்டில் நாம் அமைத்திருக்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய அரசு போதுமான நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கி உள்ளதா?

பதில்:- படிப்படியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை.

கேள்வி:- அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சென்னையில் கொரோனா தொற்று தினந்தோறும் பரவி வருகிறது. சமூக பரவலாக மாறி இருப்பதாக நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?

பதில்:- சமூகப் பரவல் கிடையாது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சிறிய சிறிய வீடுகள், குறுகிய தெரு, நெரிசலான வீடுகளில் ஒரே வீட்டில் 7, 8 நபர்கள் வசிக்கின்றார்கள். அதில்தான் நாம் கண்டறிய வேண்டும். தொற்று அங்கேதான் அதிகமாக ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டு இருக்காது. ஏற்கனவே நோய் கண்டறியப்பட்ட பகுதி, கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பகுதி, தடை செய்யப்பட்ட பகுதிகளில்தான் நோய் பரவல் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும், அனைவரையும் கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி:- 31-ம் தேதிக்கு பிறகு ஊடரங்கு உத்தரவு தளர்வுபடுத்தப்படுமா?

பதில்: மத்திய அரசு என்ன அறிவிப்பு வெளியிடுகின்றது என்று பார்க்கலாம். மருத்துவக் குழுவை விரைவில் சந்திக்க இருக்கிறோம். மருத்துவக் குழுவினரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்பொழுது படிப்படியாக தளர்வு செய்து கொண்டிருக்கிறோம். வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் விதிமுறைகளுக்குட்பட்டு பாதி அளவுக்கு திறந்து பணிகள் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி:- கொரோனா பாதிப்பால் தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளில் இருக்கிறது. அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். ஆனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையைக்கூட மத்திய அரசு கொடுக்காமல் இருக்கிறதே? இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தப் பணம் கூட தராமல் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே நெருக்கடியில் இருக்கிறது. வல்லரசு நாடுகளே நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே, நமக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிதியை கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லாம் வந்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும், மார்ச் மாதத்தில் 7 நாட்களும், இந்த காலக்கட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துவிட்டது. சுமார் ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை சொல்லியிருக்கிறது. அதை சரிகட்டுவதற்காக அரசு பல்வேறு வகையில் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நடவடிக்கைகளை நாங்கள் அறிவிப்பில் கொடுத்திருக்கிறோம். ஆகவே, அரசாங்கம் பல்வேறு வகையில் இழப்பீட்டை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், வளர்ச்சி பணிகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம்.

கேள்வி:- இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறதே?

பதில்:- நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன். பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்தேன். இன்றைக்கு இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு எங்களுடைய அரசு துணை நிற்கும்.

கேள்வி:- கல்வியாண்டு துவங்க இருக்கின்றதே?

பதில்:- கல்வியாண்டு துவங்கவில்லை. ஜூன் 15-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும். இந்தியாவில் 15 மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்து, தேர்வுத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுவிட்டது. ஆகவே, நம்முடைய மாநிலத்திலே படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இன்றைக்கு பல்வேறு கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 1-ந் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. மக்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூன் 15-ந் தேதிக்கு தேர்வினை பள்ளிக் கல்வித்துறை தள்ளிவைத்து உள்ளது. அந்தத் தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அந்த தேர்வு நடைபெறும்.

கேள்வி: கொரோனா இல்லாத மாவட்டங்களில் எல்லா கடைகளும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா? இன்றைக்கு ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள் திறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

பதில்: எல்லா மாவட்டங்களிலும் திறப்பதற்கு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story