துப்புரவு பணியாளரை இனி தூய்மைப் பணியாளர் என்று அழைக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு


துப்புரவு பணியாளரை இனி தூய்மைப் பணியாளர் என்று அழைக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 2:30 AM IST (Updated: 24 May 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 19-ந்தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல துறைகளில் தூய்மைப்பணிகளை துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அனைத்து துப்புரவுப்பணியாளர்களும் இனி தூய்மைப்பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதம் எழுதினார். அதில், சென்னை மாநகராட்சியில் 6,398 துப்புரவுப்பணியிடங்களும், மற்ற 14 மாநகராட்சிகளில் 15 ஆயிரத்து 510, 121 நகராட்சிகளில் 16 ஆயிரத்து 288, 528 பேரூராட்சிகளில் 6,450 என மொத்தம் 44 ஆயிரத்து 646 துப்புரவுப்பணியாளர் பணியிடங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் எழுதிய கடிதத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் மொத்தம் 26 ஆயிரத்து 404 துப்புரவுப்பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் தூய்மையை பேணுவது, புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது தூய்மைப்பணிகளை மேற்கொள்வது, தெருக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள், ஆலயங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுகாதாரம் மற்றும் மக்கள் நலனை பேணி வருகின்றனர்.

எனவே அவர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையிலும், நகர்ப்புற மற்றும் ஊடக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவுப்பணியாளர்களை தூய்மைப்பணியாளர்கள் என்று அழைப்பதற்கு உரிய ஆணையை பிறப்பிக்க வேண்டுமென்று கோரியுள்ளார்.

நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் ஆகியோரின் கருத்துகளை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதனடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்களை தூய்மைப்பணியாளர்கள் என்று அழைக்க அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story