தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் விரைவில் முழு நேர வகுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் விரைவில் முழு நேர வகுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 3:30 AM IST (Updated: 24 May 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரைவில் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம் வருகிற 27-ந்தேதி நிறைவடைவதால் புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வருகிற 31-ந்தேதி வரை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை பெறுவார்கள். இந்த விண்ணப்பங்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பெயர் பட்டியல் தமிழக கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த பட்டியலின் அடிப்படையில் கவர்னர் புதிய துணைவேந்தரை தேர்வு செய்து அறிவிப்பார். தற்போது உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவதால் பல்கலைக்கழக நிர்வாகம் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காக உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவை படிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளும் அதற்கு தேவையான விரிவுரையாளர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதாலும், வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு நாளில் காலை, மாலை என 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.150 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் 715 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.200 கோடி நிதி மூலம் அரசு கல்லூரிகளில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் விரைவில் அரசு கல்லூரிகளில் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும். இதன்மூலம் மாணவ-மாணவிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரியில் படிக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Next Story