மாநில செய்திகள்

கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில்: மும்முனை தாக்குதலில் சிக்கி தூங்க முடியாமல் அவதிப்படும் சென்னைவாசிகள் + "||" + Corona, mosquito, stormy sun Disabled Chennai residents

கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில்: மும்முனை தாக்குதலில் சிக்கி தூங்க முடியாமல் அவதிப்படும் சென்னைவாசிகள்

கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில்: மும்முனை தாக்குதலில் சிக்கி தூங்க முடியாமல் அவதிப்படும் சென்னைவாசிகள்
கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில் என மும்முனை தாக்குதலில் சிக்கி சென்னைவாசிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை,

கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில் என மும்முனை தாக்குதலில் சிக்கி சென்னைவாசிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வியர்வையில் குளிப்பதும், புழுக்கத்தில் நெளிவதுமாக மக்கள் தவித்து வருகிறார்கள்.


தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்தது. ஒரு புறம் கொரோனா பயமும், மறுபுறம் வெயிலின் உக்கிரமும் சேர்ந்து மக்களுக்கு இரட்டை தாக்குதலாக அமைந்து வந்தன.


இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனது வீரியம் குறையாமல் கத்திரி வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனாவுடன், கத்திரி வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். வெயிலின் கொடுமையை சமாளிக்க வீடுகளில் ஏ.சி.க்கள், மின்விசிறிகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. எப்போது கத்திரி வெயில் காலம் ஓயுமோ? என்ற ரீதியில் ஒவ்வொரு நாளையும் கஷ்டப்பட்டு மக்கள் நகர்த்தி வருகிறார்கள்.

பகல் முழுவதும் கொளுத்தி எடுக்கும் வெயிலால் மக்கள் சோர்வடைந்து வீடுகளிலேயே அடங்கி கிடக்கிறார்கள். மாலை வந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும். அந்தளவு வெயிலின் உஷ்ணம் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தது போல உணர்விருக்கிறது. இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு கிடங்கு போலவே உணர்வை ஏற்படுத்துகின்றன. வீடுகளில் உள்ள குழாயை எப்போது திறந்தாலும் தண்ணீர் சூடாகவே வருகிறது. அந்தளவு வெயிலின் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கிறது.

பகல் முழுவதும் தகிக்கும் வெயிலால் தவித்து போகும் மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறதா? என்றால், இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏ.சி. எந்திரம் இருக்கும் வீடுகளில் நிலைமையை சமாளித்து நிம்மதியாக குளிர் காற்றில் தூங்கிவிடுகிறார்கள். ஆனால் ஏ.சி. இல்லாத வீடுகளில் நிலைமை மோசமாக உள்ளது. இரவு முழுவதும் அனல் சூழ்ந்த மண்டலமாகவே வீடுகள் மாறி போகின்றன. இதனால் இரவில் வியர்வையில் குளித்தும், புழுக்கத்தில் நெளிவதுமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புழுக்கம் தாங்காமல் பலரது வீடுகளில் இரும்பு கதவைகளை மூடிவிட்டு, கதவை திறந்து வைத்து தூங்குகிறார்கள். இன்னும் பல வீடுகளில் ஒன்றுக்கு 2 அல்லது 3 மின்விசிறிகள் ஓடுகின்றன. ஆனாலும் மின்விசிறிகளில் இருந்தும் அனல் காற்றே வருகின்றன. இதனால் தினமும் இரவு நேர தூக்கத்தை எண்ணி பார்த்தே மக்கள் சளித்து கொள்கிறார்கள். ஏற்கனவே கொரோனா ஒரு புறம், கொசுக்கடி ஒரு புறம் என இரட்டை தாக்குதலில் அவதிக்குள்ளான சென்னைவாசிகளுக்கு 3-வது சோதனையாக கத்திரி வெயில் அமைந்துவிட்டது.

இதனால் மும்முனை தாக்குதலில் சிக்கி தினம் தினம் தவிப்பதே சென்னைவாசிகளுக்கு வாடிக்கையாகி இருக்கிறது. ‘இந்த சென்னைக்கு அப்படி என்னதான் ராசியோ... புயல் வந்தாலும் சரி, குடிநீர் பிரச்சினை என்றாலும் சரி, கொசுக்கடி என்றாலும் சரி, தற்போது கொரோனா என்றாலும் சரி சென்னை தான் வரிந்து கட்டிக்கொண்டு முதலிடம் பிடிக்கிறது. இந்த துரதிருஷ்டத்தில் இருந்து சென்னை எப்போது மீளுமோ...’, என்று சென்னைவாசிகள் சளித்துகொள்வதையும் பார்க்க முடிகிறது. இதனால் தினமும் ஏதோ காட்டுக்குள் அட்வெஞ்சர்ஸ் டிரிப் போவது போன்ற மனநிலையிலேயே மக்கள் தூங்க செல்கிறார்கள்.

தற்போதுள்ள சூழலில் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரளவு மழை பொழிந்து வருகிறது. அதுபோல சென்னையிலும் மழை பெய்து பூமி குளிராதா... வருண பகவான் நம் மண்ணின் மீது கருணை காட்ட மாட்டாரா... அனல் காற்றுடன் கூடிய தூக்கத்துக்கு ஓய்வு கிடைத்து விடாதா... என்பதே சென்னைவாசிகளின் ஒருமித்த ஏக்கமாக இருக்கிறது.