வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: அக்னி நட்சத்திரம் 28-ந்தேதியுடன் நிறைவு - பல நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு


வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: அக்னி நட்சத்திரம் 28-ந்தேதியுடன் நிறைவு - பல நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு
x
தினத்தந்தி 26 May 2020 2:00 AM IST (Updated: 26 May 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இதனால் பொதுமக்கள் எண்ணியப்படி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

மேலும் ‘உம்பன்’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘உம்பன்’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்தநிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதியோடு நிறைவடைகிறது. இருந்தாலும் அதற்கு பிறகு ஒரு சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உப்புச்சத்து மற்றும் நீர் சத்து குறைவு ஏற்படும். அதிக அளவில் தாகம், உடல் சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, நுங்கு, பதனீர், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால் இவற்றை எல்லாம் சாப்பிட முடியாததுடன், சாப்பிட வேண்டிய அவசியமும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை.

பொதுவாக அக்னிநட்சத்திரம் காலங்களில் கழுத்துப்பகுதியில் வீக்கம் என்ற அம்மைக்கட்டு, மற்றும் அக்கி உள்ளவர்களுக்கு உடலில் சிறிய மற்றும் பெரிய அளவிலான கொப்பளங்கள் காணப்படும்.

அதேபோல் தோல் நோய் போன்றவை ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது இதுபோன்ற எந்த நோய்களுக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற மருத்துவமனை பக்கமே வரவில்லை. அனைத்துக்கும் காரணம் கொரோனா தான் என்று அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Next Story