ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்


ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 27 May 2020 9:24 AM GMT (Updated: 27 May 2020 9:24 AM GMT)

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

சென்னை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி, தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story