காவிரியில் கழிவு நீர் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்


காவிரியில் கழிவு நீர் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 May 2020 9:15 PM GMT (Updated: 27 May 2020 9:05 PM GMT)

காவிரியில் கழிவு நீர் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவுநீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான கார நெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வரவேண்டும்.

காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்வதால், அதை காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story