மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் + "||" + In TamilNadu An investment of Rs 15 thousand crore In the presence of Edappadi Palanisamy, 17 Companies Memorandum of Understanding

தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில் துறை சார்பில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இத்திட்டங்கள் மூலம், ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்யவும் முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின் படி தமிழக அரசின் தொழில் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தொலைநோக்குப் பார்வையுடன் முதல்-அமைச்சர் அறிவித்து, செயல்படுத்திய பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 17 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் விபரம் வருமாறு:-

* காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2 ஆயிரத்து 277 கோடி முதலீட்டில், சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘டெய்மலர் இந்தியா கமர்ஷியல்’ வாகனங்கள் நிறுவனத்தின் கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.

* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘நோக்கியா’ தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.1,300 கோடி முதலீட்டில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பின்லாந்து நாட்டினை சேர்ந்த ‘சால்காம்ப்’ நிறுவனத்தின், செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்.

காலணிகள் உற்பத்தி

* ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.900 கோடி முதலீட்டில், சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ‘செமிகண்டக்டர் சிப்ஸ்’ உற்பத்தி திட்டம்.

* ரூ.350 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த ‘ஜூங் ஜய் கம்பெனி‘ நிறுவனம் மற்றும் ‘அஸ்டன் ஷூஸ்’ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் காலணிகள் உற்பத்தி திட்டம்.

தொழிற்பூங்கா

* மப்பேடு பகுதியில் ரூ.400 கோடி முதலீட்டில் சுமார் 5 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ‘லோகாஸ்’ நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம்.

* சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், ரூ.150 கோடி முதலீட்டில் சுமார் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ‘மண்டோ ஆட்டோமொட்டிவ் இந்தியா’ நிறுவனத்தின் ‘கேஸ்டிங் பெசிலிட்டி’ திட்டம்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டைனெக்ஸ்’ நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டில், சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்திய- இங்கிலாந்து கூட்டு முயற்சியான ‘சென்னை பவர் ஜெனரேஷன்’ நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

ரசாயன உற்பத்தி

* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ‘சிப்காட்’ செய்யாறு தொழிற்பூங்காவில், ரூ.18 கோடி முதலீட்டில், சுமார் 30 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஐ.ஜி.எல். இந்தியா டிரான்ஸ்பிளான்டேஷன் சொலுஷன்’ நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தி திட்டம்;

* தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘விவிட் சோலாரி எனர்ஜி’ நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.

தகவல் தரவு மையம்

* சென்னை, அம்பத்தூரில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘எச்.டி.சி.ஐ. டேட்டா சென்டர் ஹொல்டிங் சென்னை எல்.எல்.பி.’ நிறுவனத்தின் தகவல் தரவு மையம் திட்டம்.

* சென்னையில் ரூ.1,500 கோடி முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ‘எஸ்.டி. டெலி மீடியா’ நிறுவனத்தின் தகவல் தரவு மைய திட்டம்.

* சென்னையில் ரூ.210 கோடி முதலீட்டில் சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

மின்சார வாகனம்

* சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில் ரூ.50 கோடி முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சீன நாட்டைச் சேர்ந்த ‘பி.ஒய்.டி. இந்தியா’ நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம்.

* பொன்னேரியில் உள்ள ‘மஹிந்திரா ஒரிஜின்ஸ்’ தொழிற்பூங்காவில் ரூ.46 கோடி முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு

வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த ‘டி.ஜே.ஆர். பிரிசிஷியன் டெக்னாலஜி’ நிறுவனத்தின் ‘பிரிசிஷியன் கம்போனன்ட்ஸ்’ உற்பத்தி திட்டம்.

* வாலாஜாபாத்தில் ரூ.15 கோடி முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘பில்லர் இன்டஸ்டிரீஸ் இந்தியா’ நிறுவனத்தின் ‘ஷீலிங் மெட்டிரீயல்ஸ்’ உற்பத்தி திட்டம்.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில் ரூ.12 கோடி முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘லின்கால்ன் எலக்ட்ரிக்’ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டம்.

இந்த புரிந்துணவு ஒப்பந்தங்களில் முதல் 9 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள் ‘காணொலிக்’ காட்சி மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.