கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையா? கலெக்டர், அதிகாரிகள் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையா? கலெக்டர், அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 May 2020 10:30 PM GMT (Updated: 30 May 2020 10:16 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையா? என்பது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

வடமாநிலங்களில் ஏராளமான விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நேரலகிரி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் நேற்று முன்தினம் மாலை படையெடுத்தன. இந்த வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள் குழுவினர் நேற்று அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் எருக்கன் செடிகளில் இருந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. அவை எருக்கன் செடிகளில் காணப்பட கூடிய வெட்டுக்கிளிகள் என்றும், அவற்றால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சைபர் மெத்ரின், புரோப்பனோபாஸ் கலந்த பூச்சி கொல்லி மருந்து ஒரு லிட்டரில் 3 மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியில் செடிகளில் காணப்பட்ட அனைத்து வெட்டுக்கிளிகளும் இறந்து விட்டன. மேலும் இந்த பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகள் எந்த வகையான வெட்டுக்கிளிகள் என்பதை கண்டுபிடிப்பதற்காக அவற்றை சேகரித்து அவை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் குமரி மாவட்டம் திருவட்டார் பூவன்காடு அருகே ஒருவரின் விவசாய நிலம் உள்ளது. இங்கு வாழை, ரப்பர் மரம், அன்னாசி போன்றவற்றில் உள்ள இலை, குருத்துகளை தின்றிருப்பது போன்று காணப்பட்டது. ஏதோ நோய் தாக்கி உள்ளதாக நினைத்த விவசாயி நேற்று தோட்டத்தில் சென்று பார்த்தார். அங்கு சேதங்கள் அதிகரித்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளிடம் நடந்தவற்றை கூறி உள்ளார்.

இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது, வெட்டுக்கிளிகள் அங்கு படை எடுத்தது தெரிய வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் சில இடங்களை சேதப்படுத்தி இருந்தது. இதைதொடர்ந்து வேளாண் அதிகாரிகள் விரைந்து வந்து பயிர் சேதத்தை பார்வையிட்டனர்.

Next Story