மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் விளக்கம்


மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் விளக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 4:15 AM IST (Updated: 1 Jun 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்ற புதிய விதிமுறைகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்குள் மட்டும் பயணிகள் ‘இ-பாஸ்’ இல்லாமல் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு மண்டலங்களில் இருந்து மற்ற மண்டலங்களுக்கு செல்வதற்கும், மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கும் ‘இ-பாஸ்’ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் யார்-யாருக்கு, என்னென்ன பரிசோதனைகள்? மேற்கொள்ள வேண்டும் என்று புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களில் ‘இ-பாஸ்’ தேவை இல்லை. அவ்வாறு வரும் தனி நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை. மேலும் ஒரு மண்டலத்தில் இருந்து மற்ற மண்டலங்களுக்கு பயணிப்பவர்களில் (பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களை தவிர்த்து) கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இருந்து மற்ற மண்டலங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தால் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் 7 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும் வீட்டு கண்காணிப்பில் இருக்க வசதி இல்லாதவர்கள் கட்டண அடிப்படையில் அரசு கண்காணிப்பில் தங்க வேண்டும். தொழில் ரீதியாக பயணிக்கும் நபர் 48 மணி நேரத்தில் மீண்டும் சொந்த இடத்துக்கு திரும்ப முறையான ஆவணம் வைத்திருந்தால் அவருக்கு கண்காணிப்பு தேவை இல்லை.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைவரும் ‘இ-பாஸ்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியாவின் ‘ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களான குஜராத், டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பு அல்லது கட்டண அடிப்படையில் அரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இருந்து வருகிறவர்களில் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவ்வாறு வசதி இல்லாதவர்கள் 7 நாட்கள் கட்டண அரசு கண்காணிப்பிலும், 7 நாட்கள் வீட்டில் சுய கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story