சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் பஸ் போக்குவரத்து அனைத்து கடைகளும் திறக்க அனுமதி


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் பஸ் போக்குவரத்து அனைத்து கடைகளும் திறக்க அனுமதி
x
தினத்தந்தி 1 Jun 2020 5:45 AM IST (Updated: 1 Jun 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் நீடிப்பதால் நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதேபோல் தமிழகத்திலும் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை 30-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்த 5-வது கட்ட ஊரடங்கில் அவர் மேலும் பல தளர்வுகளை அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருதியும் சில தளர்வுகளுடன் நேற்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

நான் நடத்திய ஆய்வு கூட்டங்கள், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகள், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அறிவிக்கையின் அடிப்படையில், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து தடையில் இருக்க வேண்டிய செயல்பாடுகள் வருமாறு:-

* வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது. ஆனாலும் மருத்துவத்துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. எனினும் இந்நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கும்.

அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கும் தடை நீடிக்கிறது.

மேற்கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

மாநிலத்தில் பொது பஸ் போக்குவரத்தை 1-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைப்படுத்துவதற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் முதலாம் மண்டலம், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி 2-ம் மண்டலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி 3-ம் மண்டலம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை 4-ம் மண்டலம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் 5-ம் மண்டலம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி 6-ம் மண்டலம், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு 7-ம் மண்டலம், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் 8-ம் மண்டலம் என பிரிக்கப்பட்டு உள்ளது.

7-ம் மண்டலத்துக்கு உட்பட்ட காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் 8-ம் மண்டலத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும். 7 மற்றும் 8-ம் மண்டல பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் (ஸ்டேஜ் கேரியர்ஸ்) இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்துக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ தேவையில்லை என்பதால், பொது போக்குவரத்து பஸ்களில பயணிக்கவும் ‘இ-பாஸ்’ அவசியமில்லை.

அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்துக்கான பஸ்கள் இயக்கப்படும்.

அனைத்து வகையான வாகனங்களும் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலத்துக்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவற்றுக்கு ‘இ-பாஸ்’ தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும், ‘இ-பாஸ்’ முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) சில பணிகளுக்கு மட்டும் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

* தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். என்றாலும், 20 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. என்றாலும் முடிந்தவரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் (மால்கள்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும். குளிர் சாதன எந்திரங்கள் இருந்தாலும் அதை இயக்கக்கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள் (வருகிற 7-ந் தேதி வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ‘டாஸ்மாக்’ உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்.

* 8-ந் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில் சமூக இடைவெளிக்காக மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. ஏ.சி. எந்திரங்கள் இயக்கப்படக்கூடாது.

* டீ கடைகளில் 8-ந் தேதியில் இருந்து 50 சதவீத இருக்கையில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (இ-காமர்ஸ்) வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்‌ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* பொது மக்கள் ‘இ-பாஸ்’ அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், இந்நோய் தொற்றை தடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும் பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முக கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும் தவிர்த்து, அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்கான அரசாணையும் உடனடியாக நேற்று பிறப்பிக்கப்பட்டது.


Next Story