68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின


68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின
x
தினத்தந்தி 1 Jun 2020 12:44 PM IST (Updated: 1 Jun 2020 12:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடனும் சுகாதாரத்துறையின் கடுமையான விதிகளைப் பின்பற்றியும் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

சென்னை

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் பல தளர்வுகளை அளித்து,  ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார். 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. 

கோவை கோட்டத்தில் காலை 6 மணி முதல் ஆயிரத்து 326 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இம்மாவட்டத்தை பொறுத்தவரை 539 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல் பொள்ளாச்சியில் இருந்து அருகாமை நகரங்கள் கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு காலை முதல் பேருந்து இயக்கம் தொடங்கியது. அதேபோல் நகர பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது.

57 இருக்கைகள் கொண்ட நகரப் பேருந்தில் 36  பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குகின்றனர். இதேபோல் வத்தலகுண்டு பணிமனையில் இருந்து திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி என 20 வெளியூர் பேருந்துகளும், பட்டிவீரன்பட்டி, எம் வாடிப்பட்டி, கொடைரோடு, விருவீடு மற்றும் எழுவனம்பட்டி என 13 நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

வேலூரில் இருந்து மாவட்ட எல்லைக்குள் 130 அரசுப் பேருந்துகளும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகள், தனிநபர் இடைவெளிவிட்டு இருக்கைக்கு ஒருவராக அமரவைக்கப்பட்டனர் . 

Next Story