கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கே 920 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் இந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன்பின்னர் 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெறும்.
வரும் ஜூன் 3 ஆம்தேதி மாலை வடக்கு மராட்டியம் மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். இதனால் வடக்கு மராட்டியம், கோவா மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்னாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம். திருவட்டார், திற்பரப்பு, பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேசிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி போன்ற அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story