முதல்வன் பட பாணியில் ரேசன் கடைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ!


முதல்வன் பட பாணியில் ரேசன் கடைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ!
x
தினத்தந்தி 1 Jun 2020 5:26 PM IST (Updated: 1 Jun 2020 7:47 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரில் கடைக்கு நேரில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை,

மதுரை பெத்தானியபுரத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் தனது குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருப்பதாகவும் ரேஷன் கடையில் ஒன்பது கிலோ மட்டுமே அரிசி வழங்கியுள்ளதாக அமைச்சரிடம் நேரிடையாக புகார் அளித்தார். மேலும் கடை ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் விரட்டி அனுப்பி விட்டதாகவும் அமைச்சரிடம் அந்த பெண் தெரிவித்தார்.

இதையடுத்து கடை விவரத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் 
சம்பந்தப்பட்ட கடைக்கு நேரடியாகச் சென்றார். கடைக்குள் பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நபரை யார் என்று விசாரித்தபோது அவர் கடைக்குத் தொடர்பு இல்லாதவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

நியாய விலை கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 9.5 கிலோ மட்டுமே பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அந்த எடையாளரை பணியிடை நீக்கம் செய்ய கூட்டுறவுத் துறை அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என போலீசார் தெரிவித்தனர்.

ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரில் கடைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story