கருணாநிதியின் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


கருணாநிதியின் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2020 3:06 PM IST (Updated: 2 Jun 2020 8:01 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில்,  சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில்  கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான், கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும்  கலைஞரின் புகழ் போற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story