கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் - முதலமைச்சர் பழனிசாமி


கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 2 Jun 2020 11:50 AM GMT (Updated: 2 Jun 2020 11:50 AM GMT)

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, பல முக்கிய விஷயங்கள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்.   தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது.சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது.

முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் கொரோனா அதிகம் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு. இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில் தான். கொரோனாவை ஒழிக்க அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் செயல்பட்டால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தவே முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக பரிசோதனை செய்வதன் மூலம் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியமுடிகிறது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிறப்பான பணியால் கொரோனா நோயாளிகள் 56% பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story