வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது அரசு அவசர சட்டம் பிறப்பித்தது


வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது அரசு அவசர சட்டம் பிறப்பித்தது
x
தினத்தந்தி 3 Jun 2020 4:15 AM IST (Updated: 3 Jun 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை எவ்வித சிரமமுமின்றி லாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடைய ஏதுவாக மின்னணு சந்தை முறைக்கு அனுமதியளித்தும், வணிகர்களின் சிரமத்தை போக்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கியது மற்றும் ஒருமுனை விற்பனை கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண்மை விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தமிழ்நாடு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 என்ற சட்டத்தில் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஓர் அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கருதியது.

இந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவு பூங்கா வளாகங்களிலோ, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

இந்த பன்முக தன்மையிலான விற்பனை முறைகளில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விற்பனை முறையையும் தேர்வு செய்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், அதன் மூலமாக தங்கள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்று பயனடையவும் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் போது அவர்களிடமிருந்து விற்பனை கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்றும் இந்த அவசர சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் கவர்னர் சில சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசர சட்டத்தினை பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) 1987 சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவது மற்றும் விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை கடந்த மே 29-ந் தேதியில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story