ஓய்வின்றி இயங்கிய டி.வி.க்கள், மின்விசிறிகள் பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த மின் கட்டணம்


ஓய்வின்றி இயங்கிய டி.வி.க்கள், மின்விசிறிகள் பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த மின் கட்டணம்
x
தினத்தந்தி 3 Jun 2020 10:30 PM GMT (Updated: 3 Jun 2020 10:30 PM GMT)

வீடுகளில் ஓய்வின்றி டி.வி.க்களும், மின்விசிறிகளும் இயங்கிய நிலையில், மக்களுக்கு ‘ஷாக்’ அளிப்பது போல மின் கட்டணம் வந்திருக்கிறது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் மக்கள் புலம்புகிறார்கள்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம். கொரோனாவுடன், கோடை வெயிலும் கைகோர்த்த நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஊரடங்கு நேரத்தில், மின் கட்டணம் செலுத்தும் தேதி வந்தால், முந்தைய சுழற்சியில் செலுத்திய கட்டணமே இப்பொழுதும் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்தது. ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டர் ரீடிங்க் எடுக்க முடியாது என்பதால், இந்த முடிவை மின் வாரியம் எடுத்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் என்ன தொகையை மின் கட்டணமாக செலுத்தியிருந்தார்களோ, அதே கட்டணத்தை கடந்த ஏப்ரல் மாதத்திலும் மக்கள் செலுத்தினர். ஊரடங்கு காலத்தில் மட்டுமே இச்சலுகை என அறிவிக்கப்பட்டும் இருந்தது.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்ததால் டி.வி.க்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஓய்வின்றி உழைப்பை கொட்டி வருகின்றன. குட்டிகளை பிரியாத குரங்குகளாக எந்நேரமும் செல்போன்கள் சார்ஜ் போட்டபடியே காணப்பட்டன. கோடை வெயில் காரணமாக ஏ.சி. எந்திரம், ஏர்கூலர்கள் பயன்படுத்தும் வீடுகளிலும் மின் தேவை அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கொரோனா பயத்தால் வீடுகளில் பணியாற்றும் அலுவலக ஊழியர்கள் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தி வந்ததால் வழக்கத்தை விட வீடுகளில் மின் பயன்பாடு அதிகரித்தது. இந்தநிலையில் வீடுகளில் தற்போது மின் மீட்டரில் ரீடிங்க் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த முறை எப்படி கட்டணம் வந்திருக்கிறது? என்பதை அறிய மின் கட்டண அட்டையை பார்த்தவர்களுக்கு நிச்சயம் ‘ஷாக்‘ அடித்தது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரணம் இதுவரை இல்லாத அளவு மின் கட்டணம் 2 அல்லது 3 மடங்கு உயர்ந்திருப்பது தான். ‘என் வீட்டுக்கு இவ்வளவு கட்டணம் இருக்காதே...? ரீடிங்க் எடுக்கையில் ஏதாவது குழப்பம் நடந்திருக்கலாம்...‘ என்று புலம்பி தவிக்கிறார்கள். பலர் அதிர்ச்சி அடைந்தாலும் மற்ற வீடுகளிலும் இதே நிலை ஏற்பட்டிருப்பதால் என ஓரளவு சமாதானம் அடைந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் வீடு வீடாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் முந்தைய கால ரீடிங்க் தொகையை செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். எனவே பயனீட்டாளர்கள் கடந்த முறை கட்ட வேண்டிய தொகை கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போதைய சுழற்சிக்கான மீட்டர் ரீடிங்க் எடுக்கப்பட்டு அதன்படி கட்டணம் கணக்கிடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுழற்சிக்கும் தரப்படும் 100 யூனிட் மானியம் கழிக்கப்பட்டு, முந்தைய மாதத்துக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை இந்தமுறை சேர்க்கப்பட்டு இருக்கிறது.

கோடைக்காலம் என்பதால் நிச்சயம் வீடுகளில் மின் தேவை அதிகரிப்பது வழக்கம். அதானாலேயே இந்த முறை மின் கட்டணம் மக்களுக்கு அதிகமாக தெரிகிறது“, என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “முன் எப்போதும் இல்லாத அளவு மின் கட்டண தொகை வந்திருக்கிறது. எப்படி மின் கட்டணத்தை செலுத்த போகிறோம் என்றே பயமாக இருக்கிறது. கொரோனா வந்தாலும் வந்தது, இப்படி எல்லா வகையிலும் எங்களை புலம்ப செய்துவிட்டது“, என்றனர்.

Next Story