வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் சென்னை தொழில் அதிபர் வன்கொடுமை சட்டத்தில் கைது


வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் சென்னை தொழில் அதிபர் வன்கொடுமை சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Jun 2020 3:17 AM IST (Updated: 5 Jun 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் செயற்கை முறையில் இரட்டை குழந்தை பெற்றதை காரணம் காட்டி வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 34). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு முதலில் குழந்தை இல்லை. கணவரை பிரிந்து வாழ்கிறார்.

இந்தநிலையில் தான் வேலை பார்க்கும் வங்கிக்கு அடிக்கடி வரும் பெண் வாடிக்கையாளர் ஒருவர் சந்தியாவுக்கு பழக்கமானார். அந்த பெண் வாடிக்கையாளர் ஏற்பாட்டின் பேரில், சந்தியாவுக்கு மருத்துவமனை ஒன்றில் செயற்கை முறையில் கருத்தரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தியாவும் செயற்கை முறையில் கருத்தரித்து 2 பெண் குழந்தைகள் பெற்றெடுத்தார். இனிதாக சென்ற அவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. அவரது தோழியான பெண் வாடிக்கையாளரின் கணவர் நாகூர்மீரான் (45) மூலம் அந்த புயல் வீசியது.

தொழில் அதிபரான நாகூர் மீரான் சென்னை பெரியமேட்டில் தோல் கம்பெனி வைத்துள்ளார். அவர் வங்கி அதிகாரி சந்தியாவை நூதன முறையில் மிரட்ட ஆரம்பித்தார். சந்தியாவுக்கு செயற்கை முறையில் பிறந்த இரட்டை குழந்தைகளும் தனது உயிர் அணுவில் வந்தது என்றும், அதனால் அதற்கு இணையாக ரூ.25 லட்சம் பணம் வேண்டும் என்றும், பணம் தராவிட்டால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். மேலும் செயற்கை முறையில் பிறந்த இரட்டை குழந்தைகளை கொன்று விடுவதாகவும், பயமுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் உயிர் அணு நாகூர் மீரானுடையது இல்லை என்று சந்தியா மறுத்துள்ளார். அது செயற்கை முறையில் கருத்தரிக்க சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு மட்டும் தெரிந்த ரகசியம் ஆகும்.

நாகூர் மீரான், அதிகாரி சந்தியாவின் வீட்டிற்கும் சென்று இது தொடர்பாக மிரட்ட ஆரம்பித்துள்ளார். நிலைமை மோசமானதால், வேறு வழியில்லாமல் இந்த பிரச்சினை தொடர்பாக வங்கி அதிகாரி சந்தியா, சென்னை எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சேட்டு இந்த புகார் தொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நாகூர் மீரான் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story